'Welcome' | 'இதுதான் இஸ்லாம்'

The # 1 Tamil Muslim Site from Idhuthanislam.com

ஜும்ஆ மேடைகள் பயனற்றுப்போவதேன்!

மனிதனின் அறிவார்ந்த மாற்றங்களுக்கும் அரசியல் பொருளாதார மற்றும் கலை இலக்கிய ரீதியான மாற்றங்களுக்கும் முழு முக்கிய பங்கு வகிப்பது பேச்சுக்கலையும் எழுத்துக்கலையுமாகும். எவ்வித தடையுமின்றி மனிதனின் உள்ளத்தை ஊடுருவி சென்று அவனிடம் மாற்றத்தையும் செயற்பாடுகளையும் ஏற்படுத்துவது பேச்சுக் கலையேயாகும். மனித சமுதாயம் நல்வழியிலோ அல்லது தவறான வழியிலோ இயங்குவதற்கு பேச்சுக் கலையே முதலிடம் வகிக்கிறது.
மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள பேச்சுக்கலை என்பது இறைவன் மனிதனுக்கு செய்த அருள் என்று இறைவன் தனது வேதத்தில் குறிப்பிட்டுக் காட்டுகிறான்.(அருளாளனாகிய இறைவனே) மனிதனைப் படைத்தான்.(மனிதனுக்கு) அவனே பேச்சுக் கலையை கற்றுக் கொடுத்தான்.(அல் குர்ஆன்,55:4-5)
மனித அறிவும் அவன் சிந்தனையும் விரிவடைகின்றபோது பேச்சுத் துறைக்கான தேவையும் அதிகரிக்கும் என்பதை எவரும் மறுக்க மாட்டார். இஸ்லாம் எக்கால சூழலுக்கும் வழிகாட்டும் மார்க்கம் என்பது உண்மையாகும் போது அந்த வழி காட்டல்கள் மனித சமுதாயம் முழுமைக்கும் முன் வைக்கப்பட வேண்டும். இதை சிந்திக்கும் போது மக்களை சென்றடையும் பிரச்சார ஊடகங்களை வலுவாக பயன்படுத்துவதின் அவசியம் உணரப்படும். தீமைகளுடன் மிகப் பெரும் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற போதனையை உணர்த்தியே மனிதன் படைக்கப்பட்டுள்ளான் இதை அவனுக்கு தங்கு தடையின்றி நினைவூட்டும் வழிகளை இஸ்லாம் காட்டியுள்ளது. அதில் முக்கிய பங்கு வகிப்பது ஜூம்ஆ பள்ளிகளின் பிரச்சார மேடைகளாகும். எனவேதான் இஸ்லாம் அனைத்து முஸ்லிம்களும் இறை இல்லங்களின் பிரதி வெள்ளிக் கிழமைகளில் ஒன்றுக்கூடி இறைவன் வகுத்துள்ள வாழ்க்கை நெறி பற்றிய போதனைகளை பிரச்சாரத்தின் வழியாக செவியேற்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்றைய தினங்களின் பிரச்சாரத்தை முக்கியத்துவம் வாய்ந்தவைகளில் ஒன்றாகவும் இஸ்லாம் ஆக்கியுள்ளது. இதை விவரிக்கும் இறை வசனத்தைப் பற்றி சிந்திக்கும் போது பிரச்சாரத்திற்காக இஸ்லாம் ஏற்படுத்தியுள்ள ஜூம்ஆ மேடைகளின் ஆழம் நமக்கு தெளிவாகிறது.
'இறை நம்பிக்கையாளர்களே! ஜூம்ஆ தினத்தில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் இறைவனை நினைவுக்கூருவதற்காக நீங்கள் (பள்ளிகளுக்கு) விரைந்து வாருங்கள். (நீங்கள் வியாபாரிகளாக இருந்தால்) வியாபாரத்தை விட்டு விடுங்கள் நீங்கள் அறிவுடையோர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு சிறந்தது' (குர்ஆன்,62:9)
1) இறைவனை நினைவுக்கூற பள்ளியை நோக்கி விரைதல்.
2) இது அறிவோடு சம்பந்தப்பட்ட முக்கிய விஷயமாகும்.
இறை நினைவை மேம்படுத்தி-அறிவாளியாக இறை நம்பிக்கையாளனை உருவாக்கும் பணி ஜூம்ஆ தினத்தில் பொதிந்துள்ளது. இறைவன் மனிதனிடம் எதிர்பார்க்கக் கூடிய பண்புகளெல்லாம் அவனிடம் கொஞ்சம் கொஞ்சமாக மிளிர துவங்கிய அற்புதம் ஜூம்ஆ மேடைகளை சரியாக பயன் படுத்தும் ஒவ்வொரு கால கட்டத்திலும் நடந்துள்ளது.
இறைத்தூதர் முஹம்மத் -ஸல்- அவர்கள் சந்தித்த ஜூம்ஆ மேடைகள் இதற்கான சான்றுகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் சந்தித்த மேடைகள் முழுக்க முழுக்க குர்ஆனை-அதன் போதனைகளை- தத்துவங்களை - அரசியல் சட்டங்களை - பெண்ணுரிமைகளை - தனிமனித ஒழுங்குகளை - சமூக பிணைப்பை - பொருளாதாரத்தை - மரணத்தை-மறுமையை - மீண்டும் எழுப்பப்படுதலை - விசாரணை மன்றத்தை - அந்த சந்தர்பத்தில் நிகழும் மகா கொடுமையான சம்பவங்களை - நல்லவர்களும் தீயவர்களும் தனித்தனியாக சந்திக்கப்போகும் சொர்க்கம் நரகம் என்ற முடிவில்லா பெரு வாழ்வை இவை அனைத்தையும் அங்கு உட்கார்ந்திருப்போர்களின் உள்ளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி தாமதிக்காமல் அதை நோக்கி செயல்படும் உத்வேகத்தை கொடுக்கும் - இறை மீடியாவாக - அமைந்திருந்தது. நபிமார்களின் வரலாறுகள், அவர்கள் இறைவழியில் பாடுபட்டபோது ஏற்பட்ட சோதனைகள், அதை அவர்கள் சந்தித்த விதங்கள், இறை போதனைக்கெதிரான ஷைத்தான்களின் சூழ்ச்சிகள், அதை முறியடிக்கும் விதங்கள் அதற்கான பயிற்சி போன்றவை விவாதித்து விளக்கப்பட்டன. இறையாட்சிக்கு எதிராக செயல்படும் அனைத்து வித வழிகேடுகளையும் துடைத்தெறியும் போராட்டத்தில் சில நேரம் ஆயுதம் ஏந்தும் சூழ்நிலை உருவாகும். (இறைவன் ஆட்சி அதிகாரத்தை வழங்கிய சில நபிமார்களின் வாழ்வில் இத்தகைய சூழ்நிலை சில சந்தர்பங்களில் உருவானது) அத்தகைய நிலை உருவானால் அதை எதிர் கொள்ளும் இராணுவ வீரர்கள் எத்தகைய கட்டுப்பாட்டுடன் நடந்துக் கொள்ள வேண்டும்... மண்ணுக்கோ பொருளுக்கோ ஆசைப்படாமல் இறை திருப்தியை கைக் கொள்ளும் விதங்கள் யாவை... போன்ற முஸ்லிம் உம்மத்துக்குத் தேவையான எல்லாவித பயிற்சி போதனைகளும் ஜூம்ஆ மேடைகளிலேயே முழங்கப்பட்டன. இத்தகைய பேரெழுச்சி இறைத்தூதர் சந்தித்த ஜூம்ஆ மேடைகளிலும் அவர்களிடமிருந்து பயிற்சிப் பெற்றவர்களின் ஜூம்ஆ மேடைகளிலும் இருந்ததால் அன்றைய மக்களில் எவரும் ஜூம்ஆவை தவறவிடாமல் முன்கூட்டியே பள்ளிகளில் சென்று அமரும் நிலையை வரலாறுகள் சொல்கின்றன. கால கட்டங்கள் மாறி, சொல்ல விளங்காத காரணங்களால் முஸ்லிம்களின் சிந்தனைப் போக்கு மாற்றமடைய துவங்கியப்பின் ஜூம்ஆ மேடைகளின் நோக்கங்களும் சிதறடிக்கப்பட்டு விட்டன. கதைகளும் கற்பனைகளும் இன்றைய மேடைகளை அலங்கரிக்கின்றது. அறிவுக்கும் காலகட்டத்திற்கும் பொருந்தாத விஷயங்கள் அந்த மேடைகளில் பேசப்படுகின்றன. மன முரண்டான விதண்டாவாதங்கள் சத்தற்ற விவாதங்கள, உப்பு சப்பில்லாத பிரச்சனைகள் தாளாரமாக்கப் பட்டுள்ளன. என்றைக்கோ சிலர் எழுதிவைத்த புத்தகங்களை அரபியில் படிப்பது மட்டுமே ஜூம்ஆ நிறைவேறுவதற்கான விதி என்ற இடைக்கால மரபு வழி நம்பிக்கை மேடைகளில் நிற்பவர்களின் மனதில் ஆழமாக பதிக்கப் பட்டுவிட்டன. விளைவு, அரபி விளங்காத மக்கள் அயர்ந்து தூங்க முடிவு செய்து விடுகிறார்கள். சுருக்கமாக சொல்வதாக இருந்தால் ஒரு காலத்தில் முஸ்லிம்களின் சிந்தனையை தட்டி எழுப்பி உலகத்திற்கு வழிகாட்டும் உத்வேகத்தை கொடுத்த மேடைகள் இன்று உறக்கத்தில் முஸ்லிம்களை ஆழ்த்தும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டன.
இஸ்லாமியத்தை கட்டி காப்பாற்றும் பொறுப்பு ஜூம்ஆ பேருரைகளுக்கு இருக்கிறது. இஸ்லாத்திற்கெதிரான சதி திட்டங்களை மேற்குலகம் தம்மிடம் முடங்கி கிடக்கும் மீடியாக்கள் மூலம் தங்கு தடையின்றி செயலாற்றி வருகின்றன. (உலகில் வன் கொடுமையான ஆட்சியாளர்கள் எவ்வளவோ இருக்கும் போது சத்தாம் ஹூசைனை மட்டும் பெரும் கொடுமையாளராக சமீபத்தில் மேற்கத்திய மீடியாக்கள் இராக்கை கைப்பற்றும் வரை தொடர்ந்து ஒளிபரப்பியதை இதற்கு உதாரணமாக கூறலாம்.)
அதை எதிர்த்து அதன் போலிகளை வெளிச்சம் போட்டுக் காட்ட அதே போன்று மீடியாக்கள் - செய்தி ஊடகங்கள் நம்மிடம் இல்லை என்றாலும் அதைவிட பன்மடங்கு செய்திகளை வெளியில் எடுத்துச் செல்லும் உடனுக்குடனான மாற்றங்களை ஏற்படுத்தும் வாய் வழி செய்தி ஊடகங்களை - மீடியாக்களை - ஜூம்ஆ மேடைகளை இறைவன் முஸ்லிம் சமூகத்திடம் கொடுத்துள்ளான். இதை நாம் சரியாக பயன் படுத்தியிருந்தால் இஸ்லாத்திற்கெதிரான உலகளாவிய சதிகள் இந்த அளவிற்கு விரிந்து சென்றிருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.
இதைப்பற்றி எல்லாம் ஜூம்ஆ பிரசங்கம் செய்யும் இமாம்களால் சிந்திக்க முடிவதில்லை. காரணம் அவர்கள் கற்ற கல்வி முறை அப்படி. வாரந்தோரும் வெள்ளிக் கிழமைகளில் ஒரே நேரத்தில் நூற்றக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான மக்களை சென்றடையும் தனது கருத்துக்களை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும், இன்றைய உலக நடப்பிற்குரிய இஸ்லாமிய தீர்வுகளை எப்படி முன்னெடுத்துச் செல்ல வேண்டும், ஜூம்ஆ நடக்கக்கூடிய ஊர்கள், அன்றைய நேரங்களில் அந்த ஊர் சந்திக்கும் பிரச்சனைகள் இவைகளைப் பற்றிய கருத்தாக்கங்களை எந்த முறையில் சொல்ல வேண்டும் போன்ற சிந்தனைகள் பெருவாரியான ஜூம்ஆ இமாம்களுக்கு எட்டுவதே இல்லை. அதனால் தான் ஒரு சிறு விஷயம் குறித்து பல நாட்கள் பேசப்படுகின்றன. இறைவனை நினைவுக்கூற வருபவர்கள் - இத்தகைய ஜூம்ஆ உரைகளால் வெறுப்படைந்து அலுப்புடன் இல்லம் திரும்புகிறார்கள். இது எந்த நோக்கத்திற்காக இறைவன் பள்ளியை நோக்கி விரைய சொன்னானோ அந்த நோக்கத்தையே பாழ்படுத்தக் கூடியதாக அமைந்து விடுகிறது.
ஜூம்ஆ உரைகள் பயனற்றுப்போவதற்கான காரணங்கள்:
1) ஜூம்ஆ உரை வெறும் சடங்காக மட்டுமே கருதப்படுவது. எந்த நோக்கத்திற்காக இந்த மேடை ஏற்படுத்தப்பட்டதோ அந்த நோக்கத்தைத் துளியும் உணராமல் இது ஜூம்ஆவிற்குரிய சடங்கு எத்துனையோ பள்ளி இமாம்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சடங்குகளை நிறைவேற்ற உயிரோட்டம் தேவையில்லை என்ற பொதுவான மனநிலைதான் வெள்ளி மேடைகளிலும் கடைப்பிடிக்கப் படுகின்றன. பள்ளி முழுவதும் நிறைந்து முஸ்லிம்கள் உட்கார்ந்திருந்தாலும் அவர்களின் மனங்கள் இந்த சடங்கிலிருந்து வெகு தொலைவு தள்ளி நின்று அந்த நேரங்களில் வேறு தனக்கு விருப்பமான சிந்தனையில் ஐக்கியமாகி விடுகிறது.
2) பல பள்ளிகளில் ஜூம்ஆ உரை அதற்குரிய உணர்ச்சியை இழந்து வெறும் விரிவுரை தோரணையில் நிகழ்த்தப்படுவதால் பாமர மக்கள் அத்தகைய உரைகளிலிருந்து விடபட்டு விடுகிறார்கள். இறைத்தூதர் அவர்கள் ஜூம்ஆ உரை நிகழ்த்தும் போது அவர்களின் கண்களெல்லாம் சிவந்து விடும், குரல் உயர்ந்து விடும், ஒரு ராணுவ வீரருடைய தோரணை அங்கு தென்படும் என்றெல்லாம் அந்த ஜூம்ஆக்களை அனுபவித்த நபித்தோழர்கள் அறிவிக்கிறார்கள். ஒரு செய்தியை விரிவுரை தோரணையில் பிரசங்கத்திற்குரிய மிடுக்கிலிருந்து மாறுபட்டு நிகழ்த்தும் போது உரையின் செய்திகள் ஓரளவு படித்தவர்களை மட்டுமே சென்றடையும். அவர்களல்லாத மற்ற அனைவரும் ஜூம்ஆ ஏற்படுத்த வேண்டிய தாக்கத்தை பெற முடியாமலேயே வீடு திரும்புகின்றனர்.
3) செய்தித் தாள்களையோ, இன்னப் பிற உலகியல் விஷயங்களையோ கற்றுணராத இமாம்கள் கருத்து வேறுபாடு தென்படும் மஸாயில் பிரச்சனைகளையே திரும்ப திரும்ப ஜூம்ஆ உரைகளில் பேசும் போது உட்கார்ந்திருப்பவர்கள் வெறுப்படையத் துவங்கி விடுகிறார்கள். உதாரணமாக குஜராத் போன்ற பக்கத்து மாநிலங்களில் முஸ்லிம்கள் பெறும் அவதிக்குள்ளாகிக் கொண்டிருக்கும் போது விரல் அசைத்தல் பற்றிய விவாதங்கள் ஜூம்ஆ மேடைகளில் பேசப்படுவது வந்திருப்பவர்களை எரிச்சலடைய செய்து விடுகிறது. ஜூம்ஆ உரைகள் பயனற்றுப் போவதற்கு இப்படி பலக் காரணங்களை சொல்லலாம்.
கலாச்சாரம் - பொருளாதாரம் - ஆயுதப் போராட்டம் என்று பல திக்குகளிலும் முஸ்லிம்கள் பிரச்சனையை சந்தித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் அவர்களுக்கு வழி காட்டும் கூடுதல் பொறுப்பு ஜூம்ஆ மேடைகளில் நிற்பவர்களுக்கு (உண்டு) வேண்டும்.
இந்தப் பொறுப்புணர்ச்சியை உணர்ந்தவர்களுக்கு பயனளிக்கும் வகையில் சில ஆலோசனைகள்.
1) உலகளாவிய முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடுகள். எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் இவைகளை அறிந்து வைத்திருத்தல் அவசியம்.
2) சம காலங்களில் முஸ்லிம்களுக்கு ஏற்படும் இடையூறுகளிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கான அறிவு மற்றும் ஆய்வு மனப்பான்மையைப் பெற்றிருப்பதும் இல்லையெனில் பெற முயற்சிப்பதும் கட்டாயம்.
3) தாம் பணி செய்யும் ஊர்களில் இஸ்லாமிய சிந்தனைமிக்க இளைஞர்களை கண்டெடுத்து அவர்களோடு தம் சமூகம் சந்திக்கும் பிரச்சனைகளை பகிர்ந்து அதன் மூலம் அவர்களின் குடும்பங்களுக்கு இந்த சிந்தனையோட்டத்தை எடுத்து செல்லும் முயற்சிகளை மேற் கொள்ளுதல்.
4) கால கட்டங்களுக்கு தகுந்த மாதிரி ஜூம்ஆ உரைகளை அமைத்துக் கொள்ளுதல் அதற்கான தயார் நிலையில் இருத்தல்.
5) சொல்ல வேண்டிய பிரச்சனைகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் அழுத்தமாகவும் ஆழமாகவும் எடுத்து வைக்கும் கலையை வளர்த்துக் கொள்ளல்.
6) தம் ஊர் மக்களின் புரியும் திறனை உணர்ந்து அவர்களுக்கு புரியும் விதத்தில் செய்திகளை இலகு படுத்துதல்.
7) இறைவன் மீதான மறுமை மீதான நம்பிக்கையையும் தாக்கத்தையும் அழுத்தமாக பதிய வைக்க குர்ஆன் வசனங்களையும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளையும் நிறைய நிறைய ஜூம்ஆ உரைகளில் பயன் படுத்துதல்.
8) சட்டங்களை விளக்கும் சூழ்நிலைகளில் அது பற்றிய அறிவை முடிந்த அளவிற்கு முழுமையாக பெற்றிருத்தல்.
9) உலக வாழ்க்கையிலிருந்து மார்க்கத்தை வேறுபடுத்திக் காட்டாமல் உலகத்தை வென்றெடுப்பதே மார்க்கத்தின் முக்கியப் பணி என்ற உண்மையை நபிமார்களின் வாழ்க்கையிலிருந்து மேற்கோள் காட்டி உரையை தொகுத்துக் கொள்ளல்.
10) மிக முக்கியமாக, தாம் மதரஸாக்களில் கற்றுக் கொண்டக் கல்விதான் முக்கியமான முழுமையான கல்வி என்ற பிடிவாதமான மனநிலையை உடனடியாக மாற்றியமைத்து இன்னும் இன்னும் நிறைய கற்றுக் கொள்வோம் என்ற பரந்த மனப்பான்மையை உருவாக்கிக் கொள்ளுதல்.
11) முஸ்லிம்களுக்கு மத்தியில் பகையை ஊட்டி வளர்க்கும் எந்த பிரச்சனைக்கும் தம் உரைகளில் பேச்சுக்களில் அழுத்தம் கொடுக்காமல் இருக்க வேண்டும்.
இதையெல்லாம் கவனத்தில் கொண்டு ஜூம்ஆ உரைகள் நிகழ்த்தப்பட்டால் அதுவே இஸ்லாம் ஜூம்ஆவில் எதிர்ப் பார்க்கும் தாக்கத்தை ஓரளவாவது ஏற்படுத்தும்.
'இறை நம்பிக்கையாளர்களுக்கு உபதேசம் பயனளிக்கும்' என்ற குர்ஆன் வசனத்தை நினைவு கூர்ந்து இந்தக் கட்டுரையை முடிக்கிறோம். இறைவன் நேர்வழிக்காட்ட போதுமானவன்.

 

மறுமொழிகள் :
This comment has been removed by a blog administrator.
 
yeah wouderful, very useful, you have told what i was expecting about Jimma, good work
 
நல்ல பதிவு தொடர்ந்து தாருங்கள்.
 
இது தான் இஸ்லாம் இணைய தளத்தில் ஜும்ஆ மேடை பற்றிய கட்டுரை கண்டேன் மிக அற்புதம் ஏதையேனும் எழுத வேண்டும் என்னும் ஆர்வத்தில் ஏதாவது ஒரு தலைப்பைப் பற்றி சிந்தித்து நான் எழுத ஆரம்பித்தால் அடுத்த நாளே அது பற்றிய அருமையான கட்டுரை இது தான் இஸலாம் இணைய தளத்தில் வந்து விடுகின்றது. ஆம் அதுபோல் தான்.ஜும்ஆ பற்றிய கட்டுரையும் அருமையான கருத்துக்கள். அற்புதமான சிந்தனை. இக்கட்டுரையை பிரதி எடுத்து தமிழகத்தின் அனைத்து ஊர்களின் ஜும்ஆ பள்ளிவாசல்களுக்கும் அனுப்பி வைக்கும் பொறுப்பை யாரேனும் ஏற்றுக் கொண்டால் என்னால் இயன்ற உதவியை நபனும் செய்யக் காத்திருக்கிறேன்.
அன்புடன் மஸ்தூக்கா
 
Post a Comment

<< கடைசியாக பதிந்த கட்டுரைக்கு செல்

This page is powered by Blogger. Isn't yours?

அலமாறி
இணைப்புகள்

Linked to idhuthanislam.com