'Welcome' | 'இதுதான் இஸ்லாம்'

The # 1 Tamil Muslim Site from Idhuthanislam.com

ஈவ்டீஸிங் பாடலாசிரியர்கள்

ஈவ்டீஸிங் பாடலாசிரியர்கள்
பெண்ணியத்திற்கும் அதன் கண்ணியத்திற்கும் எதிராக எழுதித் தள்ளும் திரைப்பட கவிஞர்கள் பற்றியும் அவர்களின் பாடல்வரிகள் பற்றியும் ஓர் அலசல்!
திரைப் படங்கள், இவை ஆக்ரமிக்காத, தொட்டுப் பார்க்காத மனித மனங்கள் அகில உலகிலும் மிகக் குறைவு. பிற எல்லாவற்றையும் விட மனித மனங்களை கவர்ந்திழுக்கும் சக்தி திரைப்படங்களுக்கு உண்டு. இந்திய சுதந்திரத்துக்கு முன்பும் அதற்குப் பிறகு வந்த காலகட்டங்களிலும் கூட திரைப்படங்கள் ஓரளவு நாட்டின் மீதான தாகத்தையும், நேர்மையான ஆட்சியாளர்கள், அரசு ஊழியர்களையும் மக்களுக்குப் படம் பிடித்துக் காண்பித்தன. குடும்ப உறவை பேணுதல், கணவன் மனைவிக்கு மத்தியிலான கட்டுபாடான வாழ்க்கை முறை, குழந்தைகள் மீதான அக்கறை - கவனம் என்று திரைப்படங்கள் இந்திய சமூக அமைப்பை வலுப்படுத்தும் முகமாகவே படமாக்கப்பட்டன. வரம்பு மீறல்கள் இருப்பின் அவை தணிக்கைக் குழுவால் வெட்டி எரியப்பட்டன.

அனைத்துப் படங்களும் இதே அடிப்படையில் வந்தவைதான் என்று நாம் சொல்லவில்லை. பல திரைப்படங்கள் வெறும் பொழுதுப் போக்கிற்காகவே எடுக்கப்பட்டு திரையிடப்பட்டன. ஆனாலும் அவை மற்ற கருத்தாழமிக்க திரைப்படங்கள் போல மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறவில்லை.

பழங்கால திரைப்படங்களில் வேலை செய்த அனைவருமே தங்களுக்குத் தாங்களே சமூக பொறுப்பையும் அக்கறையையும் அதிகமாக சுமந்துக் கொண்டிருந்தார்கள் என்பதற்கு அப்படங்களின் கதை காட்சி அமைப்பு - பாடல்கள் போன்றவை சாட்சியாகின.

இன்றைக்கு திரைப்படத் துறை படுவேகமாக வளர்ந்து விட்ட நிலையில் அதோடு சேர்ந்தே சீரழிவும் வளர்ந்துள்ளது என்பதற்கு திரைக்கதை - காட்சி அமைப்பு - பாடல்கள் என்று எல்லாமும் ஆதாரமாக இருக்கின்றன.

திரைக்கதைப் பற்றிய விமர்சனங்களை விட தமிழ்ப்படங்களில் இடம்பெரும் பாடல்கள் அதற்கான காட்சி அமைப்புகள் ஆகியவையே அதிகப்படியான கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும். ஏனெனில் பார்வையாளனின் மனத்திரையில் திரைப்படங்களின் மொத்த காட்சிகளை விட பாடல் வரிகளும் அந்த பாடல்களுக்கு ஏற்ப அமைக்கப்பட்ட பின்னணி காட்சிகளுமே ஆழமாகப் பதிகின்றன. பாடல்களே மீண்டும் மீண்டும் தொலைகாட்சிகளில் - வானொலிகளில் ஒலி - ஒளிப்பரப்பப் படுவதால் அதன் ஆழம் இன்னும் அழுத்தமாகின்றது.

எது ஒன்றும் மக்களிடம் எந்த அளவிற்கு சென்றடைகின்றதோ அந்த அளவிற்கு அது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை 'மீடியாக்காரர்களுக்கு' நாம் சொல்லிப் புரிய வைக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.

மக்கள் - குறிப்பாக இளைஞர்கள் - மனங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் பாடல் வரிகளை உருவாக்குபவர்களுக்கு உண்மையிலேயே கூடுதல் மனிதத்துவ சிந்தனை இருக்க வேண்டும். மெட்டுக்கு ஏற்ற மாதிரி வார்த்தைகளைப் போட்டு பாடலை எழுதி விடலாம் என்று பாடலாசிரியர் நினைத்தால் அதுவே அவர்களின் கொள்கையின்மையையும் அடிமைத்தனத்தையும் படம் பிடித்துக் காட்டி விடும்.
இருப்பினும் சில பாடலாசிரியர்கள் கண்டனத்திற்குள்ளாகும் போது 'நாங்கள் என்ன செய்வது.. மெட்டுக்கு ஏற்றது போன்று பாடல் எழுத வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகி விட்டதே..' என்று தங்கள் தரப்பை நியாயப்படுத்துவதை அவர்களின் பேட்டிகளை படிக்கும் போதோ - பார்க்கும் போதோ அறியலாம்.

இவர்கள் சொல்வது போல மெட்டுக்கு பாட்டு எழுத வேண்டும் என்பது காலத்தின் நிர்பந்தம் என்று அவர்களுக்காக வைத்துக் கொண்டாலும் பாடல் வரிகளின் மீதும் வார்த்தைகளின் மீதும் எத்தகைய நிர்பந்தமும் இல்லை. அதை தேர்ந்தெடுப்பதில் இவர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. வார்த்தைகளில் ஏற்படும் விபரீதங்களே அழுத்தம் வாய்ந்தவையாகும்.

இசையை ரசிக்கத்தான் முடியும் அதை சிந்திக்க முடியாது. ஆனால் பாடல் வரிகளை ரசிக்கவும் முடியும் சிந்திக்கவும் முடியும் செயல்படுத்தவும் முடியும். அத்தகைய பாடல் வரிகளில் ஏராளமானவை 'பெண்மைக்கு எதிராகவே' திரைப்படங்களுக்காக எழுதப்பட்டு வருகின்றன.

பெண் என்பவள் வர்த்தகத்திற்கு ஏற்ற கவர்ச்சிப் பொருளாகவே ஆணாதிக்க சிந்தனையில் எப்பொழுதும் மிளிர்ந்துக் கொண்டிருக்கிறாள். அவளது எண்ணங்கள் உணர்வுகள் எதுவொன்றும் அவளது புறத் தோற்றம் பற்றிய ஆண்களின் சிந்தனைக்கு முன் தொடர்ந்து தோல்வியைத் தான் தழுவுகின்றன.

எங்கும் பெண் - எதிலும் பெண் என்ற நிலை உருவாகி வருவது அவளது கல்வி, எண்ணங்கள், சிந்தனைகள் ஆகியவற்றிற்கு கிடைத்துள்ள வெற்றியாக இன்றைக்கும் கருத முடியாது. அப்படியே கருத வேண்டி வந்தாலும் அதில் ஓரளவே நியாயமிருக்கும். அதை கடந்த அனைத்துமே அவளது உடல் தோற்றத்திற்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வெற்றியேயாகும். இத்தகைய வெற்றியை கொடுப்பதில் நாங்கள் சளைத்தவர்களல்ல என்ற ரீதியில் தான் தமிழ் பாடலாசிரியர்கள் பாடல்களை எழுதி வருகின்றார்கள்.

'எப்படி எப்படி சமஞ்சது எப்படி.. சக்கரவள்ளிக் கிழங்கே நீதான் சமஞ்சது எப்படி..' என்று ஒரு பாடல் தமிழகத்தில் வெளி வந்த தருணங்களில் 'பெண்மை கேள்விக்குறியாக்கப்பட்டது'. அந்தப் பாடலால் பெண்கள் அனுபவித்த சீண்டல்களும் தொல்லைகளும் ஏராளம்.

வீடு, வீதி, அலுவலகங்கள், பள்ளிக் கூடங்கள் என்று அனைத்துத் தரப்புப் பெண்களுக்குப் பின்னாலும் வக்கிர ஆண்களால் இந்தப் பாடல் வரிகள் மெதுவாகவோ சப்தமாகவோ முனு முனுக்கப்பட்டன.

இளமைப் பருவம் என்பது வாழ்வில் முக்கியமானப் பகுதியாகும். அது பக்குவப்படுத்த வேண்டிய காலகட்டம் என்றாலும் 'வயசுக் கோளாறு' என்ற வார்த்தையால் இளமைப் பருவம் எத்தகைய தவறிலும் ஈடுபடலாம் அது தப்பில்லை என்ற மன நிலை உருவாகியுள்ளது.

இத்தகைய போதனையே பாடலாசிரியர்களின் வரிகளில் வெளிப்படுகின்றன.

சைட் அடிப்போம் தம்மடிப்போம்
தண்ணியதான் கலந்தடிப்போம்
புக்ஸ் மட்டும் எடுக்கவே மாட்டோம் (பார்த்திபன் கனவு)

சின்ன சின்ன அத்துமீறல்கள்
அது கொலைக் குற்றமாகாது (தமிழன்)

'புத்தகங்கள் வகுப்பறைகள் டார்ச்சர்களே..' என்று வைர முத்து எழுதுகிறார் (ஆசை ஆசையாய்)
'லைபாய் இருக்குமிடம் ஆரோக்யம் தான் ஒரு பிளேபாய் ஆகுமிடம் காலேஜ் தான்' என்று விஜய் எழுதுகிறார் (ஏப்ரல் மாதத்தில்)
'இவ கட்டுடலு ஒரு கல்லூரிதான் அதில் கல்வி கற்க நான் வந்தேனடா..' என்று கபிலன் எழுதுகிறார் (யூத்)

'உனக்குப் பிடிச்சா அள்ளு அள்ளு
ஊரு கெடக்கு தள்ளு தள்ளு'
'ஆடுகிற வயசில்
ஆடித்தான் பார்க்கணும் அள்ளு
அட்வைஸ் பண்ணி எவனாச்சும்
வந்தான்னா தள்ளு' இது வாலியின் உபதேசம் (பகவதி)

கல்லூரிகளுக்கும் கல்விக் கூடங்களுக்கும் இதை விட கேவலம் வேறு என்ன வேண்டும். சைட் அடித்து தம்மடித்து தண்ணியையும் கலந்தடித்து சின்ன சின்ன அத்துமீறல்கள் தப்பில்லை என்ற பாடத்தை மாணவர்கள் பாடலாசிரியர்களிடமிருந்துப் பெற்றதால் தான் சரிகா ஷா உட்பட பல இளம் பெண்கள் கல்லுரியிலிருந்து கல்லறைக்குப் போனார்கள்.

இத்தகையப் பாடல்களால் அதை எழுதி வரும் பாடலாசியரியர்கள் எத்தகைய மன - கருத்தோட்டங்களில் இருக்கிறார்கள் என்பதை தமிழ் மக்கள் - குறிப்பாக சமூகத்தின் மீது அக்கறையுள்ளவர்கள் - விளங்க வேண்டும்.

பாடல்களுக்கு ரசனையும் மன கிளர்ச்சியும் தான் முக்கியம் என்ற மன பக்குவத்தை திரைப்பாடல்கள் நமக்கு ஊட்டி விட்டதால் தான் அதன் கருத்துக்களையோ தாக்கங்களையோ நாம் கண்டுக் கொள்ளாமலிருக்கிறோம். இதுவே பாடலாசிரியர்கள் தங்கள் சிந்தனா போக்கில் வடிகட்டிய பெண் அடிமைத்தனத்தையும் பாலியல் வக்கிரங்களையும் நிறைத்துக் கொள்ள தூண்டுகோலாக அமைந்து விடுகின்றது.

'மோகம் என்று வந்து விட்டால் முகவரியே தேவையில்லை' (ஜெமினி)

'லைசென்ஸ் இல்லாத யாரைப் பார்த்தாலும்
லவர் இவளென்று தோணுது' (தமிழன்) போன்ற வரிகளை வைரமுத்து பாடலாக்கியுள்ளார்.

இந்த வரிகளில் அப்பட்டமாக பெண்களுக்கு எதிரான 'வன்முறைகள்' தூவப்பட்டுள்ளது.

மோகம் என்று வந்து விட்டால் முகவரியே தேவையில்லை என்ற போதனை ஓர் இளைஞனின் மனதில் பதிந்தால் அதனால் பாதிக்கப்படப் போவது மேட்டுக் குடியாக வாழும் வைரமுத்து(க்கள்) குடும்பத்துப் பெண்களல்ல. ஏனெனில் அவர்களை பணம் என்ற மெய்க்காப்பாளன் பத்திரமாக பாதுகாத்துக் கொள்வான். அடுத்தக் கட்ட மக்களே அனைத்திலும் பாதிக்கப்படுவது போன்று இது போன்ற தூண்டல்களால் ஏற்படும் பாதிப்புகளிலும் அவர்களே சிக்குவார்கள். சிதைக்கப்படுவார்கள்.

'லைசென்ஸ் இல்லாத எவரும் லவர்' என்ற வக்கிர எண்ணத்தில் இருக்கும் வைரமுத்து அதை போதனையாகவும் முன் வைக்கிறார். தாலி என்ற சடங்குத் தேவையில்லை என்ற முற்போக்கு சிந்தனையில் திருமணம் செய்து கொண்டவர்களையும், திருமணமே செய்யப்படாதவர்களையும் திரும்பிப் பார்க்கலாம்-தீண்டலாம் என்ற கருத்தைத் தவிர வேறு எந்த கருத்தையும் இந்த வரி முன் வைக்கவில்லை.

பெற்றவளும் பெண் - உடன் பிறந்தவளும் பெண் - மனைவியும் பெண் - மகளும் பெண் என்ற பெண்ணிய உணர்வு துளியாவது இருந்தால் இது போன்ற வக்கிரங்கள் யார் மனதிலும் தோன்றுவதற்கு வாய்ப்பில்லை.

ஆனால் திரையுலகம் என்பது பாலியல் கூடாரமாகி விட்டதால் அங்கு பிரசவமாகும் எது ஒன்றும் அந்த வாடையைத் தான் பெற்றிருக்கும் என்பதை மெய்ப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் பாடலாசிரியர்கள்.

'மண்ணில் உள்ள பொருள் என்னவென்று
செயற்கைக் கோள்கள் தேடும்
ஒரு பெண்ணில் உள்ள பொருள் என்னவென்று
என் கண்கள் தேடும்' (வைரமுத்து - தமிழன்)

'பொண்ணுங்க முகங்களை பார்க்கவே மாட்டோம்
ஆனா முகம் தவிர மத்தத பார்ப்போம்' (விஜய் - ஏப்ரல் மாதத்தில்)

'தாராளமா மனசிருந்தா கேரளான்று தெரிஞ்சுக்கோ..' (விஜய் - சமுத்திரம்)

'ஏராளமாய் மார்பிருக்கு தாராளமாய் மனசிருக்கு' (வைரமுத்து - ஜெமினி)

இதுபோன்ற வரிகள் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மனதில் மௌனமாகவே பெரும் போராட்டத்தையும், சஞ்சலத்தையும், அத்துமீறலையும் கண்டிப்பாகவே ஏற்படுத்தும்.

ஆபாசம் என்பது 'பச்சையாக கதை எழுதுவதற்கும் - காட்சி அமைப்பதற்கும் மட்டுமே கொடுக்க வேண்டிய முத்திரையா.. பாடல்களுக்கு அது பொருந்தாதா..

'கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா.. ஓடிப்போய் கல்யாணம் தான் கட்டிக்கிலாமா..
தாலியத்தான் கட்டிகிட்டு பெத்துக்கலாமா.. இல்ல புள்ளகுட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா.' போன்ற வரிகள்,

'கோழி ருசியா இருந்தா கோழிய வெட்டு, குமரி ருசியா இருந்தா குமரிய வெட்டு..' (வைரமுத்து) போன்ற வரிகள்,

'நாயுடுஹாலா மாறிவிட நாங்க ரெடி எங்கள மார்போடு சேர்த்துக் கொள்ள நீங்க ரெடியா' போன்ற வரிகள் இவைகள் போதிக்க வரும் அறிவுரைதான் என்ன..? இவை ஆபாச சந்தையில் விற்பனையாகும் விபச்சாரமாகாதா?.. அல்லது இதற்கு வேறு என்ன பெயர் கொடுப்பது?

பெண் என்பவளை 'ஒரு சீண்டல் அடையாளமாகவே' முன்னிருத்தி வரும் இது போன்ற பாடல்கள் தணிக்கைச் செய்யப்பட வேண்டும். பேருந்துகள் உட்பட பெண்கள் நிறைந்துள்ள இடங்களில் இதுபோன்ற பாடல்கள் ஒலி பரப்பப்படுவது தடுக்கப்பட வேண்டும். காமத்தை பாடலாக்கி பணம் பண்ணும் பாடலாசிரியர்கள் தங்களது நிலையை மாற்றிக் கொள்ளும் விதத்தில் வெகுஜன நெருக்கடி ஏற்பட்டாக வேண்டும்.

பாடல்தானே பிடித்தால் ரசிப்போம் பிடிக்காவிட்டால் ஒதுங்கிச் செல்வோம் என்ற மனநிலையை நாம் பின்பற்றினால் ஈவ்டீஸிங்கால் பாதிக்கப்படும் பெண்களின் குரலுக்காக திறக்கப்படவிருக்கும் நீதிமன்றக் கூண்டுகளில் பாடலாசிரியர்களுடன் நாமும் ஏற வேண்டி வரும் எச்சரிக்கை!.
பரங்கிப்பேட்டை. ஜி.என்

 

மறுமொழிகள் :
அழகாக எழுதியிருக்கிறீர்கள். மிகவும் உணர்ந்து சொல்லியிருக்கிறீர்கள் என்பது படிக்கும்போது தெரிகிறது.

மிகவும் சமுதாய பொறுப்பான ஒரு நல்ல பதிவு.

புரிகிறவர்களுக்கு எப்படி புரியுமோ? என்று புரியுமோ?

நாம் வெறும் ஏக்கமாகத்தான் வருந்துகிறோம்.

நன்றி
 
இப்பொழுது பெண்களை மட்டுமே கொச்சைப்படுத்தி அதிகமாக பாடல்கள் வருகின்றன. இது மக்கள் மத்தியில் ஒரு சாதரணமான விஷயமானது மிகவும் வருந்தத்தக்கதே.
"கண்டவரும் வந்து கையை வைக்க இது கார்ப்ப்ரேஷன் பம்ப் இல்லை" போன்ற மிக குறைந்த பாடல்களே ஆண் இனத்தை கேலி செய்கின்றன. ஏனெனில் ஆண்களை கிண்டல் செய்யும் பாடல்களுக்கு வரவேற்பு கிடைக்காது என்பது மட்டுமல்ல அறுவறுப்பாகவும் இருக்கும் என்பது இந்த புரட்சி கவிஞர்களுக்கு தெரியாமல் இல்லை.ஏனெனில் பெண்களை ரசித்து பணம் பன்ன ஏராளமான கற்பனை உள்ளது ஆனால். ஆண்களிடம் உள்ளதோ ஒரே ஒரு... சாரி அசிங்கமா போயிடப்போவுது.
 
Post a Comment

<< கடைசியாக பதிந்த கட்டுரைக்கு செல்

ஆன்மீகம் முழுமைப்பெற அவர் வேண்டும்

ஆன்மீகம் முழுமைப் பெற அவர் வேண்டும்.
நீங்கள் இறைவனை நேசித்தால் என்னைப் பின்பற்றுங்கள் (இதன் மூலம்) இறைவன் உங்களை நேசிப்பான். உங்களுக்காக உங்கள் பாவங்களை மன்னிப்பான். இறைவன் மன்னிப்பவன். நிகரில்லா அன்புடையவன் என்று (நபியே) நீர் கூறுவீராக! (அல் குர்ஆன் 3:31)

இது குர்ஆனில் மூன்றாம் அத்தியாயத்தின் 31வது வசனம்

இந்த வசனம் என்ன சொல்ல வருகிறது என்பதை அதை படித்த மாத்திரத்தில் 'பளிச்' சென்று புரிந்துக் கொள்ளலாம். ஆனால் புரிகிறது என்று சொல்லி ஒதுங்கிக் கொள்ளும் வசனம் அல்ல இது. அதன் வார்த்தை ஒவ்வொன்றையும் சிந்தித்து படிப்பினை பெற வேண்டிய வசனமாகும்.

இனி விரிவாக அணுகுவோம்.

நீங்கள் இறைவனை நேசித்தால் என்னை பின்பற்றுங்கள்.

மனிதன் சதாவும் எதையாவது ஒன்றை நேசித்துக் கொண்டிருக்கிறான். அந்த நேசத்தை ஏதோ ஒரு விதத்தில் அவன் வெளிபடுத்தியும் காட்டி விடுகிறான்.
பணத்தை நேசிக்கிறான், மனைவி மக்களை நேசிக்கிறான், உணவையும் - தூக்கத்தையும் நேசிக்கிறான் - மற்ற மற்ற சிலர் மார்க்கத்திற்கு விரோதமான - சமூக தீங்கைக் கூட நேசிக்கிறார்கள். குடி - சூது - கடத்தல் - பொதை பொருள் - அன்னிய பெண்கள் என்று நேசம் பல எல்லைகளையும் கிளைகளையும் கொண்டுள்ளது.

நாம் நேசிக்கக் கூடிய மனைவியை பார்ப்போம். அந்த தருணங்களில் மனம் குதூகளிக்கும் முகம் அந்த குதூகளிபை வெளியில் காட்டி விடும்.

பணத்தை நேசிப்போம். அது கையில் கிடைத்தவுடன் முகம் அதன் அடையாளத்தை காட்டும்.

தீய காரியங்களை செய்ய துணியும்போது சமூகத்திலிருந்து மறைந்து அந்த காரியத்தை செய்கிறான் மனிதன். 'மறைந்துக் கொள்ளுதல்' என்பது அவன் நேசத்தை காட்டி விடுகிறது.

ஒருவரை ஒருவர் நேசிக்கும் காதலர்கள்களின் அவசரமும் - துடிப்பும்; அவர்களின் நேசத்தை உலகிற்கு சொல்லி விடுகிறது.

தாயை கண்டவுடன் அவளை நேசிக்கும் குழந்தை தாவி தவழ்ந்து ஓடி வந்து அவள் மீதேறி தன் நேசத்தை வெளிபடுத்தும்.

புரிந்துக் கொண்ட - மனம் நிறைந்த நண்பர்கள் சந்திக்கும் போது சிரித்து மகிழ்ந்து ஆரத்தழுவி தங்கள் நேசத்தை உலகிற்கு காட்டுவார்கள்.

இப்படியாக நேசத்திலிருந்தும் அதை வெளிபடுத்திக் காட்டும் தன்மையிலிந்தும் விடுபட்ட மனிதர்கள் யாருமே உலகில் இல்லை.

இதே அடிப்படையில் இறைவனை நேசிக்கும் தன்மை மனித இயல்பில் கலந்துள்ளது. உலகில் வாழும் மக்களில் 95 சதவிகிதமானவர்கள் இறைவனை நேசிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அந்த நேசத்தில் தான் பெருத்த சிக்கல்களும் - முரண்பாடுகளும் தென்படுகின்றன.

முஸ்லிம்களாகட்டும், ஹிந்துக்களாகட்டும், கிறிஸ்தவர்களாகட்டும், இன்னும் பிற மதத்தவர்கள், மொழிக் காரர்கள், நாட்டவர்கள் இவர்கள் அனைவருமே தன் தாயை - காதலியை - மனைவியை - நண்பர்களை - உற்றார் உறவினரையும் சுற்றத்தாரையும் நேசிக்கும் விதமும் அந்த நேசத்தை வெளி காட்டும் விதமும் ஒன்றாகத்தான் இருக்கின்றது. இதே மக்கள் இறைவனை நேசிக்கும் விதத்தையும் - அதை வெளி காட்டும் விதத்தையும் எண்ணிப்பாருங்கள்.!

முஸ்லிம்கள்.

இவர்கள் ஒரே இறைவனை மிக வலுவாக நேசிக்கக் கூடிய சமுதாயத்தவர்கள். ஆனால் இவர்களில் கணிசமானவர்கள் இறை நேசத்தின் ஆழத்தை புரிந்துக் கொள்ளக் கூடிய வழியை கற்காமல் அதில் பெரும் தவறிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆன்மீகம் என்ற பெயரில் இறந்துப் போனவர்கள் மீதும் அவர்களின் சவக் குழிகளின் மீதும் - மத குருக்களாக கருதப்படும் ஹஜ்ரத்கள் - ஷேக்குகள் என்ற மனிதர்கள் மீதும் அளப்பறிய நம்பிக்கை வைத்து அவர்கள் சொல்லும்படியெல்லாம் நடப்பதே இறை நேசம் என்றெண்ணி ஓரிறை கோட்பாட்டில் விபச்சார தன்மையை ஏற்படுத்தி விடுகிறார்கள். அதிலேயே நிலைத்தும் நிற்கிறார்கள்.

ஹிந்துக்கள்.

இந்தியா என்ற மிகப்பெரும் மக்கள் தொகையை கொண்ட நாட்டில் அதிகமான எண்ணிக்கையில் வாழ்பவர்கள். மிகச் சிறந்த அறிவாளிகள் - பண்பாளர்கள் - கல்வியாளர்கள் - சிந்தனையாளர்கள் என்று இவர்களின் தரம் பெருகி இருந்தாலும் இவர்களின் இறை நேசத்தின் வெளிபாட்டை - ஆன்மீக வழிபாட்டை கவனித்தால் அந்த தரம் மிக்கவர்களா இப்படி என்று எண்ணத்தோன்றி விடும். ஆம். மிக உயர்ந்த படைப்பாகிய மனிதர்கள் தன்னோடு எந்த விதத்திலும் - நிலையிலும் ஒப்பிட்டே பார்க்க முடியாத - அந்த தகுதி அறவே இல்லா - தவற்றையெல்லாம் வணங்கி வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். கல்லும் - மண்ணும் - மரமும் - மட்டையும் - மலமும் - பாம்பும் - எலியும் - பல்லியும் - பறவையும் - இவர்களின் இறைவனாகிப் போய் இவர்களை ஆதிக்கம் செய்துக் கொண்டிருக்கிறது.

கிறிஸ்துவர்கள்.

வழிகாட்ட வந்தவரையே வணங்கத்துவங்கியவர்கள். பிறப்பும் - பசியும் - தாகமும் - இயலாமையும் - பலவீனமும் - தூக்கமும் - துக்கமும் - எரிச்சலும் - கோபமும் - கடைசியில் இறப்பும் கொண்ட - மலஜல குடலை சுமந்துக் கொண்டு வாழ்ந்த ஒருவரை இறைவனின் சந்ததி என்றாக்கி - அவருக்கு இறை மகன் என்று பெயரிட்டு பின்னர் அவரை கல்லாக்கி - சிலையாக்கி சிலையை நேசிக்கவும் - வழிபடவும் துவங்கி விட்டார்கள்.

கற்றுக் கொடுக்கப்பட வேண்டிய நேசம்.

முரண்பாடுகள் கொண்ட இந்த அறியாமையை போக்க என்ன வழி? கற்றுக்கொடுப்பது என்பதை தவிர வேறு வழியில்லை. வலது கையால் உண்ணும் இயல்பான நிலையிலிருந்து மாறி இடது கையால் ஒரு குழந்தை உண்ணும் போது அங்கு அந்த குழந்தைக்கு கற்றுக் கொடுப்பது பெற்றோர்களின் பொறுப்பாகி விடுகிறது. அறிவிருந்தும் தெரிந்துக் கொள்ள சக்தியற்ற மாணவனுக்கு புரியும் விதத்தில் சொல்லிக் கொடுப்பது ஆசிரியரின் கடமையாகி விடுகிறது. அதே போன்று தான் இறை நம்பிக்கையும் இறை நேசமும் பாழ்பட்ட பழக்க வழக்கங்களால் கறை படியும் போது அதிலிருந்து அவற்றை தூய்மை படுத்தி மக்களுக்கு புரிய வைப்பது இறைவன் மீது கடமையாகி விடுகின்றது.

அந்த பாடத்தை செவ்வனே மக்களுக்கு போதிக்கும் பணியை இறைவன் இந்த வசனத்தில் துவங்குகிறான்.

'இறைத்தூதரே நீர் கூறும். மக்களே! நீங்கள் இறைவனை நேசிப்பதாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் என்று'

இறைவனை நேசிப்பதற்கும் இவரை பின்பற்றுவதற்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்ற ஆச்சரியம் கலந்த கேள்வி இங்கு எழலாம். அர்த்தமுள்ள கேள்விதான். ஒரு அடிப்படையை புரிந்துக் கொண்டால் இதற்கு விடை கிடைத்து விடும்.

இறைவனை நேசிப்பதாக இருந்தால் என்னை பின்பற்றுங்கள் என்று சொல்லப்பட்டவரும், சொல்பவரும் ஒரு சாதாரண மனிதராக மட்டுமில்லை. அவரை இறைவன் தன் தூதராக தேர்ந்தெடுத்துள்ளான். இறைத்தூதர் என்ற நிலையிலிருந்து அந்த வார்த்தை சொல்லப்படுகிறது. சொல்லக்கூடிய மனிதரை மட்டும் பார்க்காமல் அவருடைய தகுதியையும் பார்க்க வேண்டும்.
அவர் ஒரு இறைத்தூதர். இறைவனை பற்றி மக்களுக்கு அறிவித்து அவன் விரும்பும் விதத்தில் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள பணிக்கப்பட்ட ஒரு உயர்ந்த மனிதர் அவர். தன் மீது விதிக்கபட்ட பணியில் அவர் ஒரு கடுகளவேனும் குறைப்பாடு செய்யவில்லை என்பதால் இறைவனை அறியும் விதத்தையும் - அவன் மீதான நேசத்தையும் அவரை பின்பற்றியே பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற சூழ்நிலை இயல்பாகவே ஏற்பட்டு விடுகிறது.

மனிதர்களே! நீங்கள் இறைவனை நேசிப்பதாக இருந்தால் என்னை பின்பற்றுங்கள் என்ற வார்த்தை முஹம்மத்(ஸல்) அவர்கள் தன் விருப்பத்தில் சொன்ன வார்த்தையல்ல. அந்த வசனத்தில் 'நீர் சொல்வீராக' என்ற ஏவல் வந்துள்ளது. அதாவது இப்படி சொல்ல வேண்டும் என்ற கட்டளை இறைவனால் பிறப்பிக்கப்படுகிறது. இறைவனே அப்படி சொல்ல சொன்னதிலிருந்து அவனை அடையும் வழியை எவ்வளவு துள்ளியமாக முஹம்மத்(ஸல்) பெற்றுள்ளார்கள் என்பதை விளங்கலாம்.

அந்த வழியை முஹம்மத் அவர்களை தவிர வேறு யாரும் பெறவில்லையா என்ற கேள்வி அடுத்து எழலாம். அனேக மக்கள் பெற்றிருந்தனர். அந்த மக்கள் அனைவருமே இறைத்தூதர்கள் என்ற அந்தஸ்தில் இருந்தவர்கள் தான். ஆனால் அவர்கள் அனைவரும் முஹம்மத் அவர்களின் வருகைக்கு முன்னால் தம் தமது சமூகங்களுக்கு மட்டுமே வழிகாட்ட அனுப்பப்பட்டார்கள். பணியின் வட்டம் சிறியதாக இருந்ததால் அவர்களின் வாழ்க்கை முறையை பாதுகாக்கும் ஏற்பாடுகள் குறைவாகவே இருந்தன. அது மட்டுமின்றி அந்த இறைத்தூதர்களின் மறைவுக்கு பிறகு அந்தந்த மக்கள் இறைத்தூதர்கள் கொண்டு வந்த வழிமுறையில் - போதனையில் பல மாற்றங்கள் செய்து புதிய வழிமுறைகளை உருவாக்கிக் கொண்டனர். (இதற்கு உதாரணமாக கிறிஸ்துவத்தை குறிப்பிடலாம். இயேசு கொண்டு வந்த கொள்கை இன்றைக்கு பைபிளிலோ - கிறித்தவ உலகிலோ இல்லை. இயேசுவிற்கு பிறகு பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டதாக சொல்லிக் கொண்ட பவுல் என்பவரே இன்றைய கிறித்தவத்தை உருவாக்கினார் இதற்கு பைபிளிலிருந்து அடுக்கடுக்கான சான்றுகளை எடுத்து வைக்க முடியும். ஒரு பெரிய மதத்தின் நிலையே இதுவென்றால் அவருக்கு முன்னால் வந்தவர்கள் பற்றிய நிலையை நாம் சாதாரணமாக புரிந்துக் கொள்ளலாம்.)

முஹம்மத்(ஸல்) அவர்களின் பணி உலகலாவிய பணியாக இருந்ததால் அவர்களின் வாழ்க்கை முறையின் பாதுகாப்பு ஏற்பாடு மிக பலப்படுத்தப்பட்ட நிலையில் இறைவனால் ஆக்கப்பட்டது.

இறைத்தூதரே! நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பியுள்ளோம் என்று இவைன் கூறுகிறான் (அல் குர்ஆன் 34:28)

இந்நிலையில் உலக மக்களில் எவராக இருந்தாலும் அவர்கள் உண்மையில் இறைவனை நேசிப்பவர்களாக இருந்தால் இந்த தூதரை பின்பற்றுபவர்களாகத்தான் மாற வேண்டும்.

நீங்கள் இறைவனை நேசிப்பவர்களாக இருந்தால் என்னை பின்பற்றுங்கள் என்ற அறிவிப்பு மிக ஆழம் மிக்கதாகும்.

இறைவனை நேசிப்பதாக இருந்தால் நேராக இறைவனையே பின்பற்றி விட்டு போக முடியாதா... சத்தியமாக முடியாது. 'பின்பற்றுதல்' என்றால் ஒருவரை மாடலாக்கி அவர் செய்வது போன்று செய்வதாகும். அ.ஆ.. இ,ஈ என்று சொல்லி கொடுக்கும் ஆசிரியரின் ஓசையையும் உச்சரிப்பையும் அப்படியே திருப்பி சொல்லும் குழந்தைகளின் நிலையே பின்பற்றுவதற்குரிய நிலையாகும். இறைவனை பின்பற்றுவது என்பது - அதாவது அவனைப் போன்றே செயல்படுவது - எவராலும் (எவராலும் என்பதை எவ்வளவு வேண்டுமானாலும் அழுத்தி உச்சரித்துக் கொள்ளுங்கள்) ஒருக்காலமும் முடியாத காரியமாகும். எவராலும் முடியாத அந்த தன்மைகளில் தான் உண்மையான இறை சக்தியே அடங்கியுள்ளது.

அவனை நேசிப்பதற்கான அடையாளம் என்னவென்றால் அவன் ஏவியப்படி வாழ்ந்துக் காட்டுவதேயாகும். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் காட்டுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவரே முஹம்மத் என்ற அந்த இறைத் தூதர் ஆவார்கள். அவர் வாழ்ந்துக் காட்டிய ஒவ்வொரு அங்குலத்திலும் இறை நேசத்திற்குரிய அடையாளங்கள் குவிந்துக் கிடப்பதால் உலகில் உள்ள எவரும் அவரைத்தான் தனக்கு மாடலாக்கிக் கொள்ள வேண்டும் என்ற நிலையை இறைவன் ஏற்படுத்தி இந்த அறிவிப்பையும் முன்னிருத்தி விட்டான்.

அவரை பின்பற்றி இறைவனை அறிதல்.

மனித வாழ்க்கையோடு பின்னி பிணைந்துப்போன இறை நம்பிக்கையில் தான் எத்துனை வேறுபாடுகள் - எத்துனை பாகுபாடுகள். கற்கால மனித சிந்தனையில் உதித்த மகா பயங்கரமான - மாயாஜாலமிக்க கடவுள் கொள்கையும், மனிதனாகவே கடவுளை வர்ணித்து - வடிவமைத்துக் கொண்ட மனித கடவுள் கொள்கையுமே நாத்திகம் உயிர் பெறுவதற்கான மூலக் கூறுகளை உருவாக்கி கொடுத்து விட்டது.

உண்மையான இறைவனை அறியும் வழியை முஹம்மத் என்ற அந்த இறைத்தூதரிடமிருந்துப் பெற்றால் அந்த பாடத்தில் கடுகின் முனை அளவிற்கு கூட பலவீனம் இருக்காது.

இறைவன் ஒருவன் - அவன் தனித்தவன் - பெறப்பட்டவனோ - பெற்றவனோ அல்ல - அவன் தேவையற்றவன் - அவனுக்கு நிகராக எதுவுமில்லை - எல்ல சத்கிகளையும் தன் அதிகாரத்திற்கு கீழ் வைத்துள்ளவன் அவன் - அவனோடு போட்டிப் போடக் கூடிய மாற்று சத்கி எதுவுமில்லை - உறக்கம் - முதுமை - ஆசை - இச்சை - மறதி - மரணம் - என்ற எந்த கறையும் படியாதவன் அவன். எவரது கண்களுக்கும் - கருவிகளுக்கும் எட்டாத இடத்தில் இருந்துக் கொண்டு பிரபஞ்சம் அனைத்தையும் அவன் சூழ்ந்தறிந்து அவற்றை இயக்கிக் கொண்டிருக்கிறான். எந்த கண்களும் அவனை கண்டதில்லை. உலக வாழ்வில் எவரும் காண போவதுமில்லை. எந்த தவறை வேண்டுமானலும் செய்து விட்டு - சமூக கொடுமைகளில் சிறப்பாக பங்களித்து விட்டு - எப்படி வேண்டுமானலும் பொருளாதாரத்தை திரட்டி விட்டு - இறைவனுக்காக உண்டியலில் பணக் கட்டுகளையும் - தங்கத் தகடுகளையும் காணிக்கையாக்கி (இறைவனுக்கு லஞ்சம்) விட்டால் போதும் அவன் நம்மை ஆசிர்வதித்து விடுவான் என்ற சிந்தனை உங்களிடம் இருந்தால் நிச்சயம் நீங்கள் அழிவின் பாதையில் செல்கிறீர்கள் ஏனெனில் உண்மையான அந்த இறைவன் நீதி மிக்கவன். லஞ்சமோ, வாதாடுதலோ, பரிந்துப் பேசுதலோ அவனிடம் எடுபடவே படாது. அப்படிப்பட்ட அந்த மகா சக்திக்கு கட்டுப்பட்டு வாழும் வாழ்க்கையே தூய்மையான வாழ்க்கை. இதுதான் முஹம்மத் என்ற அந்த இறைத்தூதர் மனிதகுலத்திற்கு வழங்கிய இறைக் கோட்பாடாகும். இந்த இறைக் கோட்பாட்டில்தான் உண்மையான இறை நேசம் அடங்கியுள்ளது. இப்போது அந்த வசனத்தைப் படியுங்கள்.

'மனிதர்களே நீங்கள் இறைவனை நேசிப்பதாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் என்று நபியே நீர் கூறும்'

நாம் இறைவனை நேசிக்கிறோம் இறைவன் நம்மை நேசிக்கிறானா...

இன்னும் ஆழமாக சிந்திக்க வேண்டிய அடுத்தக்கட்டத்தை நாம் அடைந்துள்ளோம். சிறந்த பலனை அடைவதற்காக ஒருவன் கடினமாக உழைக்கிறான். ஒருவன் மிகுந்த சிரத்தையுடன் படிக்கிறான் இந்த உழைப்பாலும் படிப்பாலும் அவர்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணாகி வாழ்வில் விரக்தியையும் தோல்வியையுமே சந்திப்பார்கள்.

தண்ணீர் என்பது மனித வாழ்க்கைக்கு எத்துனை அவசியமானது! 50 அடி தூரத்தில் தண்ணீர் கிடைக்கும் என்று தெரிந்து 'போரிங்' போட்டால் கிடைக்கும் தண்ணீரை கண்டு மனம் குதூகளிக்கிறது. சில இடங்களில் 200 அடி வரை பைப் இறக்கப்பட்டாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. காரணம் தண்ணீர் எங்கு இருக்கிறது என்ற அறிவு அவர்களுக்கு இல்லாததேயாகும்.

ஐம்பது அடியில் கிடைக்கும் சந்தோஷம் இருநூறு அடிகளை கடந்த பிறகும் சிலருக்கு கிடைக்காமல் போவதை யோசித்துப் பார்த்தால் 'செயலுக்கு முன்னால் அதன் பலன் குறித்து சிந்திப்பது - ஆராய்வது' என்ற வழிக்காட்டுக் கொள்கை தெளிவாகும்.

போய் சேரக்கூடிய ஊரை மட்டும் ஒருவன் தெரிந்துக் கொண்டு அந்த ஊருக்கான வழியை தெரிந்துக் கொள்ளாமல் அலட்சியப்படுத்தி விட்டு தன் பயணத்தை துவங்குகிறான் என்றால் இந்த பயணத்தின் முடிவு குறித்து யாராலும் தீர்வு சொல்ல முடியுமா...

உலகில் உள்ள அவ்வளவு ஆத்திகர்களுமே நாங்கள் இறைவனை அளவு கடந்து நேசிக்கிறோம் என்ற 'இறை நேச தேசத்திற்கு' தன் பணயத்தை துவங்கி விடுகிறார்கள். அதே சமயம் இறைவன் நம்மை நேசிக்கிறானா... என்ற அந்த வழியை - இறை நேச தேசத்தை அடையும் வழியை - அலட்சியப்படுத்தி விட்டுப் பயணிக்கிறார்கள். காற்றலையில் ஊர்கோலம் போகும் இவர்களின் இந்த ஆன்மீக தேடல் திக்குத் தெரியாமல் தான் அலைந்துக் கொண்டிருக்கும்.

தான் நேசிக்கும் - உயிரையே வைத்திருக்கும் அந்த பெண் தன்னை நேசிக்கிறாளா... அவள் மனதில் தனக்கு இடமுள்ளதா... இருவரும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ அவள் தன்னை அங்கீகரிப்பாளா... என்ற முடிவோ - முயற்சியோ - தேடலோ இல்லாமல் போன காதல் ஒருதலை காதலாகவே சிதைந்துப் போகும். இந்த ஒருதலை காதலில் அவ்வப்போது மன ரீதியாக சில சந்தோஷங்கள் ஏற்படலாம். அவள் நினைவுகளே போதும் என்ற வரட்டு வார்த்தை வெளிப்படலாம். ஆனால் காதலியை மனைவியாக்கி அவளோடு வாழும் காலங்களில் கிடைக்கும் 'அற்புதமான இன்பத்தை' இந்த ஒரு தலை காதலர்களால் அடைந்துக் கொள்ளவே முடியாது.

இறைவன் நம்மை நேசிக்கிறானா என்று தெரிந்துக் கொள்ளாமல் நாம் இறைவனை நேசிக்கும் அந்த ஆன்மீகம் 'ஒருதலை ஆன்மீகமாகவே அமைந்து போகும்.

நாம்இறைவனை நேசிப்பது போன்று இறைவனும் நம்மை நேசிக்க வேண்டும் அதுதான் முழுமையான ஆன்மீகமாக இருக்கும். இறைவன் நம்மை நேசிக்கிறானா ?
பரங்கிப்பேட்டை. ஜி.என்

 

குர்ஆன் மட்டும் பாதுகாக்கப்படுகின்றது?

குர்ஆன் மட்டும் பாதுகர்க்கப்படுகின்றது ஏன்?
வலைப்பூவை மேய்ந்துக் கொண்டிருக்கும் போது கண்ணில் பட்ட ஒரு கேள்வி. ''விமர்சன விளக்கம்'' என்ற வலைப்பூவில் இந்தக் கேள்வி கிடைத்தது. அந்த வலைப்பூவில் இந்தக்கேள்விக்கான பதில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக சில விளக்கங்களுக்காக..

கேள்வி: இறைவன் அனைத்தையும் அறிந்தவன் என்றால் அவன் ஏன் முந்தைய வேதங்களைப் பாதுகாக்கவில்லை. எதற்காக ஒரு வேதத்தை இறக்கி பின்னர் அதை அழியவிட்டு அதன் பின்னர் மற்றொரு வேதத்தை இறக்க வேண்டும். அனைத்துக் காலத்திற்கும் ஏற்றவகையில் ஒரு வேதத்தை வடிவமைத்து இந்தகாலத்தில் நீங்கள் இதைப் பின்பற்றுங்கள். இந்தக் காலத்தில் நீங்கள் இதைப் பின்பற்றுங்கள் என்று மக்களுக்கு அறிவித்திருக்கலாமே..! என்பது கேள்வியின் முக்கியப்பகுதி.

சில அடிப்படைகளைப் புரிந்துக் கொள்ள வேண்டும். இஸ்லாம் என்பது மக்களை நம்பிக்கை என்ற வட்டத்தில் மட்டும் நிறுத்தி எது பற்றியும் சிந்திக்காதே.. மாற்றுக் கருத்துக் கொள்ளாதே.. கேள்வி கேட்காதே.. என்று முடக்கும் ஒரு மார்க்கம் அல்ல. சிந்தித்துப்பார், கேள்வி கேள், விவாதித்துத் தெளிவு பெறு என்று அழைப்புவிடும் ஒரு மார்க்கமாகும். இந்த இஸ்லாமியப் பார்வையை கவனத்தில் வைத்துக் கொண்டு கேள்வியை அணுகுவோம்.

மனித இனம் பூமியில் வாழத்துவங்கிய காலம் தொட்டே முரண்பாடுகள் தோன்றத் துவங்கி விட்டன. மனித அறிவின் பலவீனங்கள் முரண்பாடுகள் தோன்றுவதற்கும், அது வலுபெறுவதற்கும் காரணமாக அமைந்து விடுகின்றது. இத்தகைய முரண்பாடுகளை நீக்குவதற்கும், மனித அறிவால் தெளிவு பெற முடியாதவற்றிற்கு வழிகாட்டுவதற்கும் இறைவனின் வழிகாட்டல் தேவைப்பட்டது. அந்த வழிகாட்டலை அவன் இறைத்தூதர்களுக்கு வழங்கி நீங்கள் வாழ்ந்துக்காட்டுங்கள். அதுதான் பிறருக்கு மாடல் என்ற வழியை ஏற்படுத்தினான். இறைத்தூதர்களுக்கு எது செய்தியாக அறிவிக்கப்பட்டதோ அது அவர்களுக்கு வாழ்க்கையாக அமைந்தது.

ஒவ்வொரு இறைத்தூதரும் மக்களுக்கு செய்தியை அறிவிக்கும் போது 'சிந்தியுங்கள். இந்த செய்தியை ஏற்பதும் ஏற்காமல் இருப்பதும் உங்கள் சொந்த விருப்பத்தைப் பொருத்தது. ஏற்றீர்கள் என்றால் மரணத்திற்கு பிறகு உங்கள் வாழ்க்கை இப்படி இருக்கும். ஏற்கவில்லை என்றால் நீங்கள் மரணத்திற்கு பிறகு இந்த வாழ்க்கையை சந்திப்பீர்கள்' என்ற அடிப்படையில் தான் இறைச் செய்திகள் மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்டன.

அவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த சுதந்திரத்தை இறைவன் மிக நீண்டக் காலம் முழமையாக வழங்கினான். இந்த சுதந்திரம் அவர்களால் தவறாகவே பயன்படுத்தப்பட்டது. எந்த அளவிற்கென்றால் இறைவனின் வேதத்தை தங்கள் விருப்பத்திற்கு நாங்கள் மாற்றிக் கொள்வோம் என்ற அளவிற்கு அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தை பயன்படுத்தினார்கள். இதற்கு பெரும் ஆராய்ச்சித் தேவையில்லை. கண்முன் கிறிஸ்த்தவர்கள் கைகளில் இருக்கும் பைபிள் இதற்கு தெளிவான சான்றாகும். இயேசு கொண்டு வந்து போதித்த சுவிசேஷங்களுக்கும் இன்றைய கிறிஸ்த்தவர்கள் நம்பிக் கொண்டிருக்கும் பைபிளுக்கும் தொடர்பில்லை எனும் அளவிற்கு அந்த மக்கள் தங்கள் சுதந்திரத்தைப் பயன்படுத்தி வேதத்தை மாற்றினார்கள். பவுல் என்பவர் இதில் பெரும் பங்கு வகித்தார்.

மனிதர்களுக்கு இறைவன் சுய சுதந்திரத்தை வழங்காமல் சட்டங்களை - வேதத்தை அவர்கள் மீது திணித்திருந்தால் அது அவர்களால் மாசுப்படுத்தப்படாமல் தான் இருந்திருக்கும். ஆனால் இறைவன் அதை ஒரு போதும் விரும்பவில்லை. அவனை ஏற்பதிலும் - அவன் சட்டங்களை ஏற்பதிலும் - அவன் வேதத்தை பாதுகாப்பதிலும் அவர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. சுதந்திரம் பாழ்படுத்தப்படும் போது என்ன கெடுதிகள் ஏற்படுமோ அது இறை வேதங்களுக்கும் ஏற்பட்டது பல வேதங்கள் வருவதற்கு இதுதான் அடிப்படைக் காரணமாக இருந்தது.

எனக்கு இந்தக் கொள்கைப் பிடிக்கவில்லை இதை ஏற்க மாட்டேன் என்பதற்கும், எனக்கு இந்தக் கொள்கைப் பிடிக்கவில்லை அதனால் நான் இந்தக் கொள்கையை மாற்றுவேன் என்பதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. முந்தைய சமுதாயம் குறிப்பாக அதன் தலைவர்கள் பிந்தையதை செயல் படுத்தினார்கள்.

முஹம்மத் அவர்களுக்கு வழங்கப்பட்ட வேதம் ஏன் பாதுகாக்கப்பட்டது அப்படியானால் முஹம்மதை ஏற்றுக் கொண்டவர்களுக்கு சுய சுதந்திரம் வழங்கப்படவில்லையா... வேத வசனங்கள் திணிக்கப்பட்டதா... என்ற குறுக்கு விசாரணை இங்கு வரலாம். இறைவன் தனக்குத் தானே வகுத்துக் கொண்ட நியதியில் அவன் எந்த மாற்றமும் செய்துக் கொள்ள மாட்டான். மனிதர்களுக்கான சுய சுதந்திரம் என்பது முதல் மனிதருக்கு எப்படி வழங்கப்பட்டதோ அதே சுதந்திரம் உலகின் கடைசி மனிதருக்கும் உண்டு. இறைவன் அதை நிறைவாக வழங்கியுள்ளான். முந்தைய மக்களுக்கு என்ன அறிவிப்பு வழங்கப்பட்டதோ அதே அறிவிப்பு இன்றைக்கு குர்ஆனிலும் உண்டு. அதுதான் 'இதை விரும்பியவர்கள் ஏற்கலாம், விரும்பியவர்கள் நிராகரிக்கலாம்' என்பதாகும்.

முஹம்மத் அவர்கள் சந்தித்த அரேபிய மக்களுக்கு இறை வேதங்களை மாற்றும் மனப் பான்மை இல்லை. அவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து வந்த முதல் வேதம் இதுதான். (கடைசி வேதமும் இதுதான்) இறைவன் பிற பல்வேறு சமுதாயங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இறைத்தூதர்களை அனுப்பி வேதங்களை வழங்கி கவுரவித்த போதும் அவர்கள் அதை பாழ்படுத்தினார்கள். ஆனால் அன்றைய அரேபியர்கள் தமது சமுதாயத்திற்கு இறைவேதம் வந்துள்ளது என்றவுடன் அதைப் பாழ்படுத்த துணியவில்லை.

'விரும்பியவர்கள் ஏற்கலாம், விரும்பியவர்கள் நிராகரிக்கலாம்' என்ற சுதந்திரத்தில் முஹம்மத் அவர்கள் கொண்டு வந்த கொள்கையை சரியாக புரிந்துக் கொள்ளாதவர்கள் அதை நிராகரித்து வெளியில் நின்றார்களேத் தவிர இறை வேதத்தை மாற்றிக் கொள்வோம் என்ற முயற்சியில் யாரும் இறங்கவில்லை. முஹம்மத் அவர்கள் இறைத்தூதராக இருக்க முடியுமா..? என்ற சந்தேகம் சிலருக்கு அன்றைய பொழுதுகளில் தோன்றிய போது அவரை இறைத்தூதர் என்று நிருபிக்கும் அசைக்க முடியாத ஒரே ஆதாரம் குர்ஆன் தான், எனவே அவர் விஷயத்தில் நீங்கள் சந்தேகம் கொண்டால் இது போன்ற ஒரு வேதத்தைக் கொண்டு வாருங்கள் என்று முதலில் அவர்களுக்கு சவால் விடப்பட்டது. பின்னர் சவாலை மிக இலகுபடுத்தி முழு வேதத்தை கொண்டு வர முடியாவிட்டாலும் பரவாயில்லை இது போன்று சில வசனங்களையாவது கொண்டு வர முயற்சியுங்கள் என்று சொல்லப்பட்டு முஹம்மத் அவர்களின் இறைத்தூதுத்துவம் நிரூபிக்கப்பட்டது.

ஒரு வேதம் மாசுபடாமல் பாதுகாக்கப்படுவதற்கும், பாழ்பட்டுப் போவதற்கும் அந்த வேதம் வழங்கப்பட்ட மக்களே பெரும் பங்கு வகிக்கிறார்கள் என்ற உண்மையை புரிந்துக் கொண்ட எவரும் குர்ஆன் பாதுகாக்கப்பட்டதற்கான காரணங்களில் ஒன்றாக அரேபிய மக்களை கருத்தில் கொள்வார்கள்.

பொதுவாகவே பிற வேதங்களுக்கும் குர்ஆனுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் பிற வேதங்கள் அந்தந்தப் பகுதி அல்லது மொழி பேசும் மக்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டன. ஆனால் குர்ஆன் முழு உலகுக்கும் இறைச் செய்தியை எத்தி வைக்கக் கூடிய பொது வேதமாகும். அதனால் அதன் பாதுகாப்புக்கு கூடுதல் கவனம் தேவைப்பட்டது. அந்தப் பொறுப்பை இறைவன் தன் வசம் எடுத்துக் கொண்டான். 'இந்த வேதத்தை நாமே இறக்கினோம் நாமே அதை பாதுகாப்போம்' (குர்ஆன்)

முந்தைய வேதங்களுக்கும் குர்ஆனுக்கும் வித்தியாசங்கள் இப்படித் துவங்குகின்றன.

முந்தைய வேதங்கள் புதுப்பிக்கப்பட்டிருக்கலாமே.. என்ற சந்தேகங்கள் தோன்றலாம்.

'புதுப்பித்தல்' என்பது நெருக்கடியையும், புதிதாக உருவாக்குதல் என்பது விசாலத்தையும் குறிப்பதாகும். ஒரு வீட்டை புதுப்பிப்பதற்கும், அதை இடித்து விட்டு விசாலமாக புதிதாக கட்டுவதற்கும் உள்ள வித்தியாசங்களை இங்கு முன் வைக்கலாம்.

முந்தைய வேதங்கள் பகுதிக்குட்பட்டதாக இருந்தது என்பதை முன்னர் குறிப்பிட்டோம். குர்ஆன் பகுதி என்ற அந்த எல்லை நீக்கப்பட்டு விசாலப்படுத்தப்பட்டதாகியது. விசாலமாக ஒரு உடை கிடைத்து விட்ட பிறகு கிழிந்துப் போன பழைய உடையை தைத்துப் போடுவது சிறந்தது என்று யாரும் கருத மாட்டார்கள்.

சட்டங்களில் மாற்றம்.

விசாலமாக இறைவன் குர்ஆனை கொண்டு வந்ததற்கு காரணம் முந்தைய வேதங்களில் இருந்த சட்ட நெருக்கடிகளையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கு கொடுக்கப்பட்ட சட்டம் பொதுசட்டமாக ஆக வேண்டுமானால் அதற்கு மிகப் பொருத்தமான காரணங்கள் இருக்க வேண்டும். சீக்கியர்கள் குறுவாள் வைத்துக் கொள்ளலாம் என்பது ஒரு பகுதிக்கான அல்லது ஒரு இனத்தவருக்கான சட்டம். இதை உலகின் பொதுசட்டமாக ஆக்க வேண்டும் என்று கூற முடியாது, அவ்வளவு ஏன் இந்தியாவிற்குள்ளேயே இதை பொதுசட்டமாக கொண்டுவாருங்கள் என்று சொல்ல முடியாது. சொல்பவர்கள் நிச்சயம் சட்டத்தையும், கலாச்சாரத்தையும், இடங்களையும் பற்றிய அறிவில்லாதவர்களாகத்தான் இருப்பார்கள்.

காலகட்டத்திற்கு ஏற்ப பல சட்டங்களை முந்தைய வேதங்களில் வகுத்த இறைவன் காலகட்டங்களில், சூழ்நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டவுடன் அதற்கு ஏற்ப சட்டங்களை கொண்டு வந்தான். +

இறைவனுக்கு பிந்தைய காலம் பற்றிய அறிவில்லையா... அவன் அனைத்தையும் அறிந்தவன் என்றால் பிந்தைய காலகட்டத்திற்குரியவற்றையும் முன்னரே கூறி இருக்கலாமே.. என்ற கேள்வி அவ்வப்போது பலரால் முன் வைக்கப்படுகின்றது.

தன்னை சிந்தனைவாதி என்று எண்ணிக் கொள்பவர்கள் சற்றும் பொருத்தமில்லாத கேள்விகளை எப்படித்தான் வைக்கிறார்களோ என்பது உண்மையில் வருந்தத்தக்கதுதான்.

ஒரு தாய் தனது ஒரு வயது குழந்தைக்கு மென்மையான உணவுகளை கொடுக்கிறாள் என்றால் அவளுக்கு அந்த குழந்தை வளர்ந்தப் பிறகு கடின உணவு உண்ணும் என்ற அறிவு இல்லை என்று யாரும் கூறுவார்களா... பிற்காலத்தில் குழந்தை உண்ணும் என்பதற்காக அதன் ஒரு வயதிலேயே எல்லா உணவுகளையும் வாங்கி பாதுகாத்து வைப்பாளா...

நிச்சயம் அந்த தாய்க்கு தன் குழந்தை பிற்காலத்தில் என்ன உணவு உண்ணும் என்பது தெரியும் ஆனாலும் இன்றைக்கு அந்த உணவை கொடுக்கவும் மாட்டாள் அதை வாங்கி பாதுகாக்கவும் மாட்டாள். இறைவனுக்கு அனைத்தும் தெரிந்தாலும் அவன் சூழ்நலைக்கு தகுந்த சட்டங்களைத்தான் மக்களுக்கு வழங்குவான். நடைமுறைக்கு சாத்தியமில்லாதவற்றை வழங்கி சடங்காக வைத்துக் கொள்ள வழிகாட்டமாட்டான்.

எனவே,

முந்தைய மக்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரம் அவர்களால் பாழ்படுத்தப்படதாலும்,

முந்தைய வேதங்கள் சில பகுதிகள் - சில மக்கள் என்று குறிப்பிட்ட நிலையை கொண்டிருந்ததாலும்,

அரேபியர்கள் இறை வேதத்தை பாதுகாப்பதில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டார்கள் என்பதாலும்,

குர்ஆன் முழு உலகிற்கும் பொது சொத்தாக விசாலப்படுத்தப்பட வேண்டிய அவசியம் இருந்ததாலும்,

சூழ்நிலைகளும் - காலகட்டங்களும் பெருமளவு மாறி விட்டதாலும்,

முந்தைய வேதங்கள் முடிவுக்கு வந்து புது வேதமாகவும் - உலக வேதமாகவும் - இறுதி வேதமாகவும் குர்ஆனை இறைவன் வெளிபடுத்தி அதை பாதுகாத்து வருகிறான்.
பரங்கிப்பேட்டை.ஜி.நிஜாமுத்தீன்

 

This page is powered by Blogger. Isn't yours?

அலமாறி
இணைப்புகள்

Linked to idhuthanislam.com